Followers

Thursday, June 11, 2026

ஆறாம் திருமுறை - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
 நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
 செழுமதியின் தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணிமகுடத்து ஏறத், துற்ற
 இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 1

பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்;
 புலிஉரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன்நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்;
 வார்காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின்நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார்;
 வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நன்நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 2

தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்;
 துன்எருக்கின் வடம் வைத்தார்; துவலை சிந்தப்,
பாடு ஏறு படுதிரைகள் எறிய வைத்தார்;
 பனிமத்த மலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்;
 சிலை வைத்தார்; மலைபெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 3

வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
 பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரி சிலையா வைத்தார்; ஊராக்
 கயிலாய மலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்;
 சுடுசுடலைப் பொடிவைத்தார்; துறவி வைத்தார்;
நல்அருளால் - திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 4

விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்;
 வினை, தொழுவார்க்கு அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண்எரியால் காமனையும் பொடியா வைத்தார்;
 கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்;
 திசைதொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 5

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;
 உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;
மற்று அமரர் கணம் வைத்தார்; அமரர் காணா
 மறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;
செற்றம் மலி ஆர்வமொடு காம லோபம்
 சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்;
நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 6

மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்;
 மணிமுடி மேல் அர வைத்தார்; அணிகொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
 நெற்றிமேல் கண்வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார்;
 ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறுமலர்த் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 7

குலங்கள் மிகும் மலை,கடல்கள், ஞாலம், வைத்தார்;
 குருமணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்;
 உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
 நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந்நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 8

சென்று உருளும் கதிர் இண்டும் விசும்பில் வைத்தார்;
 திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்;
 நிறை தவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளிக், கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக்,
 குரைகழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 9

பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து திரைகள் ஏங்கப்,
 பனிக்கொன்றை சடை வைத்தார்; பணிசெய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
 அடுசுடலைப் பொடிவைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார்;
 உமையை ஒரு பால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம்,பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 10
 
குலம் கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்;
 குருமணிசேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
 ஒரு விரலால் உற வைத்தார் "இறைவா!" என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
 புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 11 




 

No comments:

Post a Comment