நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
9. என்னாதன் - நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறத்தல் - கலித்தாழிசை
என்னாதன் தேவிக்கன் றின்பப்பூ ஈயாதாள்
தன், நாதன் காணவே தண்பூ மரத்தினை,
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட,
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற. 307
என்வில் வலிகண்டு போவென் றெதிர்வந்தான்
தன், வில்லி னோடும் தவத்தை யெதிர்வாங்கி,
முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்
தன், வில்லின் வன்மையைப் பாடிப்பற
தாசரதி தன்மையைப் பாடிப்பற. 308
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு,
விருப்புற்றங் கேக விரைந்தெதிர் வந்து1,
செருக்குற்றான் வீரஞ் சிதைய, தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
தேவகி சிங்கத்தைப் பாடிப்பற. 309
மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட,
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்தெம்பிரான் என்றழ,
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன,
சீற்ற மிலாதானைப் பாடிப்பற
சீதை மணாளனைப் பாடிப்பற. 310
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து,
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு,
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த,
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. 311
முடியொன்றி மூவுல கங்களு மாண்டு,உன்
அடியேற் கருளென் றவன்பின் தொடர்ந்த,
படியில் குணத்துப் பரதநம் பிக்கு, அன்
றடிநிலை யீந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. 312
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு, அவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
மீள அவனுக் கருள்செய்த வித்தகன்,
தோள்வலி வீரமே பாடிப்பற
தூமணி வண்ணனைப் பாடிப்பற. 313
தாற்கிளந் தம்பிக் கரசீந்து, தண்டகம்
நூற்றவன் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்கு, அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற
அயோத்திக் கரசனைப் பாடிப்பற. 314
மாயச் சகட முதைத்து மருதிறுத்து,
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து, அணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற,
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற
ஆனிரை மேய்த்தானைப் பாடிப்பற. 315
காரார் கடலை யடைத்திட் டிலங்கைபுக்கு,
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்,
நேரா அவன் தம்பிக் கேநீ ளரசீந்த,
ஆரா வமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. 316
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று,
உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல்,
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்,
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல லில்லையே. 317
No comments:
Post a Comment