நெறிந்தகருங் குழல்மடவாய்!
நின்னடியேன் விண்ணப்பம்,
செறிந்தமணி முடிச்சனகன்
சிலையறுத்து நினைக்கொணர்ந்த
தறிந்து, அரசு களைகட்ட
அருந்தவத்தோ னிடைவிலங்க,
செறிந்தசிலை கொடுதவத்தைச்
சிதைத்ததுமோ ரடையாளம். 318
அல்லியம்பூ மலர்க்கோதாய்!
அடிபணிந்தேன் விண்ணப்பம்,
சொல்லுகேன் கேட்டருளாய்
துணைமலர்க்கண் மடமானே,
எல்லியம்போ தினிதிருத்தல்
இருந்ததோ ரிடவகையில்,
மல்லிகைமா மாலைகொண்டங்
கார்த்ததுமோ ரடையாளம். 319
கலக்கியமா மனத்தனளாய்க்
கைகேசி வரம்வேண்ட,
மலக்கியமா மனத்தனனாய்
மன்னவனும் மறாதொழிய,
'குலக்குமரா! காடுறையப்
போ'என்று விடைகொடுப்ப,
இலக்குமணன் தன்னொடுமங்
கேகியதோ ரடையாளம். 320
வாரணிந்த முலைமடவாய்!
வைதேவீ! விண்ணப்பம்,
தேரணிந்த அயோத்தியர்கோன்
பெருந்தேவீ! கேட்டருளாய்,
கூரணிந்த வேல்வலவன்
குகனோடும் கங்கைதன்னில்,
சீரணிந்த தோழமையைக்
கொண்டதுமோ ரடையாளம். 321
மானமரு மென்னோக்கி
வைதேவீ! விண்ணப்பம்,
கானமரும் கல்லதர்போய்க்
காடுறைந்த காலத்து,
தேனமரும் பொழிற்சாரல்
சித்திரகூ டத்திருப்ப,
பான்மொழியாய்! பரதநம்பி
பணிந்ததுமோ ரடையாளம். 322
சித்திரகூ டத்திருப்பச்
சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமே கொண்டெறிய
அனைத்துலகும் திரிந்தோடி,
'வித்தகனே! இராமாவோ!
நின்னபயம்!' என்றழைப்ப,
அத்திரமே அதன்கண்ணை
அறுத்ததுமோ ரடையாளம். 323
மின்னொத்த நுண்ணிடையாய்
மெய்யடியேன் விண்ணப்பம்,
பொன்னொத்த மானொன்று
புகுந்தினிது விளையாட,
நின்னன்பின் வழிநின்று
சிலைபிடித்தெம் பிரானேக,
பின்னேஅங் கிலக்குமணன்
பிரிந்ததுமோ ரடையாளம். 324
மைத்தகுமா மலர்க்குழலாய்!
வைதேவீ! விண்ணப்பம்,
ஒத்தபுகழ் வானரக்கோன்
உடனிருந்து நினைத்தேட,
அத்தகுசீ ரயோத்தியர்கோன்
அடையாள மிவைமொழிந்தான்,
இத்தகையான் அடையாளம்
ஈதவன்கைம் மோதிரமே. 325
திக்குநிறை புகழாளன்
தீவேள்விச் சென்றந்நாள்,
மிக்கபெருஞ் சபைநடுவே
வில்லிறுத்தான் மோதிரங்கண்டு,
'ஒக்குமா லடையாளம்
அனுமான் !'என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு, உகந்தனளால்
மலர்க்குழலாள் சீதையுமே. 326
வாராரும் முலைமடவாள்
வைதேவி தனைக்கண்டு,
சீராரும் திறல் அனுமன்
தெரிந்துரைத்த அடையாளம்,
பாராரும் புகழ்ப்புதுவைப்
பட்டர்பிரான் பாடல்வல்லார்,
ஏராரும் வைகுந்தத்
திமையவரோ டிருப்பாரே. 327
No comments:
Post a Comment