Followers

Friday, August 6, 2021

திருவையாறு பதிகம்

 திருவையாறு பதிகம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்து ஏந்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடி யோடுங்

களிறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


போழிளங் கண்ணியின் ஆனைப்

பூந்துகி லாளோடும் பாடி

வாழியம் போற்றிஎன்ற ஏத்தி

வட்டமிட்டு ஆடா வருவேன்

ஆழிவலவன் நின்று ஏத்தும்

ஐயாறு அடைகின்ற போது

கோழி பெடையோடுங் கூடி

குளிர்ந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


எரிப்பிறைக் கண்ணியின் ஆனை

ஏந்துஇழை யாளோடும் பாடி

முரித்த இலயங்கள் இட்டு

முகம் மலர்ந்துஆடா வருவேன்

அரித்து ஓழுகும் வெள்ளருவி

ஐயாறு அடைகின்ற போது

வரிக்குயில் பேடையோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருபாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


பிறைஇளம் கண்ணியின் ஆனை

பெய்வளை யாளோடும் பாடித்

துறையிளம் பன்மலர் தூவித்

தோளைக் குளிரத் தொழுவேன்

அறையிளம் பூங்குயில் ஆலும்

ஐயாறு அடைகின்ற போது

சிறைஇளம் பேடையோடு ஆடி

சேவல் வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

ஏடுமதி கண்ணியின் ஆனை

ஏந்திழை யாளொடும்பாடிக்

காடொடு நாடு மலையுங்

கைதொழுது ஆடா வருவேன்

ஆடல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

பேடை மயிலொடுங் கூடிப்

பிணைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


தண்மதிக் கண்ணியின் ஆனை

தையல் நல்லாளோடும் பாடி

உண்மெலி சிந்தையன் ஆகி

உணரா உருகா வருவேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

வண்ணப் பகன்றிலோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


கடிமதிக் கண்ணியின் ஆனை

காரிகை யாளோடும் பாடி

வடிவோடு வண்ணம் இரண்டும்

வாய்வேண்டுவன சொல்லி வாழ்வேன்

அடியினை ஆர்க்கும் கழலான்

ஐயாறு அடைகின்ற போது

இடிகுரல் அன்னதோர் ஏனம்

இசைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


விரும்பு மதிக்கண்ணி யானை

மெல்லிய லாளேடும் பாடிப்

பெரும்புலர் காலை எழுந்து

பெறுமலர் கொய்யா வருவேன்

அருங்கலம் பொன்மணி உந்தும்

ஐயாறு அடைகின்ற போது

கருங்கலைப் பேடையோடு ஆடிக்

கலந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


முற்பிறை கண்ணியின் ஆனை

மொய் குழலாளோடும் பாடி

பற்றிக் கயிறு அறுக்கிலேன்

பாடியும் ஆடா வருவேன்

அற்றுஅருள் பெற்று நின்றாரோ

ஐயாறு அடைகின்ற போது

நற்றுணை பேடையையோடு ஆடி

நாரை வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன் 


திங்கள்மதி கண்ணியின் ஆனை

தேமொழி யாளோடும் பாடி

எங்கருள் நல்குங்கொல் எந்தை

எனக்கினி என்னா வருவேன்

அங்குஇளம் மங்கையர் ஆடும்

ஐயாறு அடைகின்ற போது

பைங்கிளிப் பேடையோடு ஆடிப்

பறந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

வளர்மதிக் கண்ணியின் ஆனை

வார்குழ லாளோடும் பாடிக்

களவு படாததோர் காலங்

காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்

அளவு படாதுஓர் அன்போடு

ஐயாறு அடைகின்ற போது

இளமண நாடு தழுவி

ஏறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்